பிறன் இல் விழையாமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல். ⁠141

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல். ⁠142

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துஒழுகு வார். ⁠143

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல். ⁠144

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி. ⁠145

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண். ⁠146

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன். ⁠147

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு. ⁠148

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார். ⁠149

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று. ⁠150