புணர்ச்சி விதும்பல்

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு. ⁠1281

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின். ⁠1282

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண். ⁠1283

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. ⁠1284

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து. ⁠1285

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை. ⁠1286

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து. ⁠1287

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு. ⁠1288

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார். ⁠1289

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று. ⁠1290